தமிழா! மீண்டெழுந்து வா!
அந்தோ! ஆற்றுநீர் உரிமைகள் பறி போகின்றனவே!
எந்தச் சிந்தனையுமின்றி இருக்கிறாயே தமிழா?
கடல் உரிமை களவு போகிறதே! திராவிடக்
கனவுலகில் வாழ்கிறாயே தமிழா?
பூர்வீக மண்ணுரிமை பறிக்கப்படுகிறதே!
புலம் பெயர்ந்து எங்குதான் செல்வாய் தமிழா?
விளைநிலங்கள் அழிக்கப்படுகின்றனவே!
நாளை உணவுக்கு என்ன செய்வாய் தமிழா?
பேரழிவுத் திட்டங்கள் தலையில் கட்டப்படுகிறதே!
ஊரறியும் உலகறியும் நீயறிய மாட்டாயா தமிழா?
வேளாண் நிலங்களில் விமான நிலையமா!
காலனைத் தேடிப் பறக்கப் போகிறாயா தமிழா?
நன்செய்க்கு நடுவே பசுமை வழிச்சாலை!
என்செய்வாய் உன் தலைமுறைக்குத் தமிழா?
அடிப்படை உரிமை கல்வி விற்பனைக்கு!
அடிமை வாழ்வில் முடங்கிக் கிடக்கிறாயே தமிழா?
உலகத் தட்டினில் பாதி ஆண்ட பரம்பரை!
உயிர் வாழக் கிட்டினி விற்று பிழைக்கிறாயே தமிழா?
நீர் மேலாண்மையில் சிறந்தோர் வழிவந்து
நீரின்றிப் போராடித் தவிக்கிறாயே தமிழா?
நோய் நீக்கும் இயற்கை உணவிருக்க!
வாய் கேட்கும் நஞ்சைத் தின்கிறாயே தமிழா?
வந்தாரை எல்லாம் வாழவைத்தாயே!
சுங்கம் கட்டிச் சுருண்டு போனாதேனோ தமிழா?
மறக் கூட்டமென மானத்தோடு வாழ்ந்தவனே!
மரம்வெட்டச் சென்று அடிபட்டுச் சாகிறாயே தமிழா?
கடலைக் கடக்கக் கலம் முந்திக் கண்டவனே!
காடையர் தாக்கிடக் குருதிச் சிந்தி நிற்கிறாயே தமிழா?
திரை கடலோடித் திரவியம் தேடிய இனமே!
திரை மோகம் கொண்டுத் தன்னிலை இழக்கிறாயே தமிழா?
வேலை வாய்ப்பு உரிமைகளை இழந்தாயே!
சாலை தேய வேலைக்காக நடக்கிறாயே தமிழா?
நச்சு அழிவுத் திட்டங்கள் நம் தலையில்!
மிச்சம் இன்றி அழிக்கப்படுகிறோமே தமிழா?
தற்சார்புப் பொருளாதாரத்தை இழந்து!
தனியார் மயச் சுரண்டலில் தவிக்கிறாயே தமிழா?
ஆரிய திராவிட வல்லூறுகள் வட்டமிடுகின்றதே!
பாரிய போதையில் மூழ்கிக்கிடக்கும் தமிழா?
நாளங்காடி அல்லங்காடி கண்ட வணிகனே!
சாலையோர வணிகம் கூட உனக்கில்லை தமிழனே?
சதுக்க பூதம் காத்து நின்ற உன் வளமையை!
திராவிட பூதம் தின்றழிப்பதை அறியாயோ தமிழா?
மீண்டெழுந்து வா தமிழா!
ஈழத்தில் சந்திப்போம்!
திரு. ம. இராமகிருசுணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.