தமிழ்நாடு அரசின் மின் பகிர்மான கழகத்திற்கும் அதானியின் ஊழலுக்கும் என்ன சம்பந்தம்?
உலக பணக்காரர்கள் பட்டியலில் 22 ஆவது இடத்திலும், இந்தியாவின் பணக்காரர் பட்டியலில் இரண்டாம் இடத்திலும் இருக்கும் மிகப்பெரும் தொழிலதிபரான கௌதம் அதானி அமெரிக்க நீதிமன்றத்தின் விசாரணை வலையில் சிக்கியது எப்படி? கைது செய்யப்படுவாரா அதானி? இந்த வழக்கில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் தொடர்புடைய அதிகாரிகளும், ஆளும் அரசியல் தலைவர்களும் யார்? என்ற கேள்விகள் இந்தியா முழுவதும் அல்லாமல் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.
அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, அவருடைய சகோதரருமான அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தினுடைய செயல் இயக்குனருமான சாகர் அதானி, அதானி கிரீன் எனர்ஜியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி வினித் ஜெயின் என மூன்று பேர் மட்டுமல்லாமல் இன்னும் ஐந்து பேர் மேல் அமெரிக்காவின் புரூக்ளின் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அந்த வழக்கில் இவர்கள் மேல் இலஞ்சம் மற்றும் நிதி மோசடி போன்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அந்தக் குற்ற பத்திரிக்கையில் இருக்கக்கூடிய ஒவ்வொரு தகவலும் அதிர்ச்சி தரும் வகையில் அமைந்திருக்கிறது.
பொதுவாக அதானி குழுமமும் பிரதமர் மோடியும் மிகவும் நெருக்கமானவர்கள் என்பது இந்த உலகம் அறிந்ததே. மேலும் அதானி நிறுவனங்கள் பல மாநிலங்களில், அதுவும் குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் செயல்படுகின்றன. அதானி குழுமம் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் நேரடியாக தனது தொடர்பை வைத்துக் கொள்ளாது. அதற்குப் பதில் பாஜகவின் அரசு அமைப்புகளின் மூலம் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் தனது தொடர்பை வைத்துக் கொள்ளும். அது போல தான் இந்த சோலார் மின் உற்பத்தி தொடர்பான கொள்முதல் ஒப்பந்தத்திற்கு சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா SECI என்ற அமைப்பின் மூலம் தமிழ்நாடு அரசிற்கும், அதானிக்கும் இடையேயான தொடர்பை வைத்துக் கொண்டது. இதில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா, சட்டிஸ்கர், ஜம்மு காஷ்மீர், ஒடிசா போன்ற மாநிலங்களும் SECI அமைப்புகள் மூலமாகத்தான் அதானியிடம் இருந்து மின் கொள்முதல் செய்கின்றன.
மேலும் பாஜகவுடன் எதிர்ப்பு முனையில் தான் செயல்படுகிறோம் என்ற மாய பிம்பத்தை கட்டுவதற்காகவே SECI உடனான தொடர்பும் அமைகிறது. இவ்வளவு எச்சரிக்கையுடன் செயல்பட்ட திமுக மற்றும் காங்கிரஸ் தலைமையிலான இந்த மாநிலங்கள், அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் வழக்கில் இப்படி வெளிப்படையாக மாட்டுவோம் என எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். இந்த ஊழல் வழக்கை பொறுத்தவரையில் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் இருக்கக்கூடிய மின் பகிர்மான கழகத்தினுடைய அதிகாரிகள் அமைச்சர்கள் அனைவருக்கும் அதானியினுடைய இந்த இலஞ்ச நிதி மோசடியில் தொடர்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த குற்றப்பத்திரிக்கையில் என்ன இருக்கிறது? இவர்கள் மேல் என்னென்ன குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருக்கிறது? இவர்கள் என்னென்ன செய்தார்கள்? யார் யாருக்கெல்லாம் லஞ்சம் கொடுக்கப்பட்டது? இந்த ஊழல் மோசடிக்கும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? என்பதை விரிவாக பார்ப்போம்.
2019 டிசம்பர் தொடங்கி 2020 ஜூலை வரைக்கும் ஆன காலகட்டத்தில் இந்திய சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ( SECI ) சூரிய ஒளி மின்சாரம் மூலமாக மின் உற்பத்தி செய்து கொடுக்கும் ஒப்பந்தத்தை இரண்டு நிறுவனங்களுக்கு கொடுக்கப்படுகிறது. அதில் ஒன்று அதானியினுடைய துணை நிறுவனமும், மற்றொன்று அமெரிக்க பங்குச்சந்தையில் வரிசைப்படுத்தப்பட்ட இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கிற நிறுவனமும் ஒன்றாகும். அதாவது அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் மற்றும் அசூர் பவர் குளோபல் லிமிடெட் என்ற இந்த இரண்டு நிறுவனங்கள் தான் . இந்த இரண்டு நிறுவனங்களுமே சோலார் எனர்ஜி தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களாகவே இருந்து வருகிறார்கள். இவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஒப்பந்தத்தின்படி மொத்தம் 12000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து தர வேண்டும் என்றும் அதன் மூலமாக அந்த நிறுவனங்களுக்கு அடுத்த 20 ஆண்டுகளில் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 16,800 கோடி ரூபாய் லாபம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்படுகிறது. அந்த இரண்டு நிறுவனமும் உற்பத்தி செய்து தருகிற சோலார் எனர்ஜியை இந்திய சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் SECI வாங்கி, இந்தியாவில் இருக்கிற மாநில மின் பகிர்மான கழகங்களுக்கு விற்கும். இதுதான் அங்கு போடப்பட்ட ஒப்பந்தம்.
ஆனால் என்ன நடந்தது என்றால் அவர்கள் விற்க இருந்த மின்சாரத்தினுடைய விலை என்பது சந்தை மதிப்பை விட அதிகமான விலைக்கு இருந்துள்ளது. அதனால் தமிழ்நாடு போன்ற மற்ற மாநிலங்கள் முதலில் அதை வாங்க மறுத்து திருப்பி அனுப்பியுள்ளது. இந்த செயல்தான் இந்த ஊழலுக்கான அடித்தளம் என கூறுகிறார்கள். பின்னர் வரும் தகவல்கள் தான் இவர்கள் எப்பேர்ப்பட்ட ராஜதந்திர திட்டத்தை தீட்டினார்கள் என்பது உங்களுக்கு தெள்ளத் தெளிவாக விளக்கும்.
சாதாரணமாக இந்த மின் பரிவர்த்தனை எப்படி நடக்கும் என்றால் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா SECI வாங்குவதற்கு ஆள் இருந்தால் மட்டும்தான், இந்த நிறுவனங்களை உற்பத்தி செய்ய சொல்லி கொள்முதலுக்கான ஒப்பந்தத்தை கொடுப்பார்கள். ஆனால் இப்போது வாங்குவதற்கு எந்த மாநிலமும் தயாராக இல்லை என்பதனால் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா SECI அதானிக்கும் , அசூர் நிறுவனத்திற்கும் கொடுத்த ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டது. இதனால் அதானி மற்றும் அசூர் நிறுவனத்தினுடைய உற்பத்தி அனைத்தும் பாதிப்படைந்து பாதியில் நிறுத்தப்பட்டது.
தங்களுடைய வியாபாரத்தையும் சோலார் எனர்ஜி தொடர்பான தங்களது திட்டத்தையும் முன்னோக்கி கொண்டு போக முடியாமல் அதானி குழுமம் திணறிப் போய் நின்றது. இப்போது அவர்கள் கண் முன்னே இருக்கக்கூடிய ஒரே வாய்ப்பு, தமிழ்நாடு போன்ற மற்ற மாநிலங்கள் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா SECI யிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும். அப்படி கொள்முதல் செய்ய ஒப்புக்கொண்டால் தான் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா அதானியிடம் இருந்து மின்சாரத்தை வாங்கும் என்பது அதானிக்கும் அசூர் நிறுவனத்திற்கும் புரிய வந்தது. இதற்காக அவர்கள் என்ன செய்தார்கள் என்றால் இரண்டு பேரும் சேர்ந்து ஒரு திட்டம் ஒன்றை தீட்டுகிறார்கள். அந்தத் திட்டத்தின் படி இந்தியாவில் இருக்கக்கூடிய எல்லா மாநிலங்களின் மின் பகிர்மான கழகத்தின் முதுகெலும்பாக செயல்படக்கூடிய நபர்களை தேர்ந்தெடுத்து மறைமுகமாக சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்கின்றனர். இந்த சந்திப்பு தமிழ்நாட்டில் யாருடன் நடைபெறுகிறது என்றால்? அரசு எந்திரத்தின் அச்சாணியாக விளங்கும் சபரீசன் மற்றும் முக்கிய புள்ளிகள் பின்னணியில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் கூட 9 ஜூலை 2024 அன்று லீலா பேலஸ் என்னும் நட்சத்திர விடுதியில் சந்திப்பு நடைபெற்றது அனைவரும் அறிந்ததே. பின்னர் முதல்வர் ஸ்டாலின் அவர்களையும் சந்தித்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. மேலும் இந்த கொள்முதல் வியாபாரத்தை முடிக்க மாநிலங்களோடு தரகு வேலை பார்ப்பதற்காக ஒன்றிய அரசின் அதிகாரிகளும், ஆளும் அரசியல் தலைவர்களும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என விசாரணையின் அடிப்படையில் தகவல் வெளியாகிறது.
இத்தகைய சந்திப்பு எதற்காக என்றால் அதானி நிறுவனத்தின் உடன் இலஞ்சம் வாங்கிக் கொண்டு அதிக விலைக்கு விற்கப்படும் சோலார் எனர்ஜி மின்சாரத்தை இந்திய சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் SECI மூலமாக வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் அந்த ரகசிய வியாபாரம். இதற்காக இந்திய ஒன்றியம் முழுவதும் இருக்கிற பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கான இலஞ்ச பேரமும் முடிவு செய்து திட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள். இதில் முதல் கட்டமாக இலஞ்ச பேரம் இறுதி செய்யப்பட்ட மாநிலங்கள் தமிழ்நாடு, ஆந்திரா, சட்டிஸ்கர், ஜம்மு காஷ்மீர், ஒடிசா என சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றப்பத்திரிக்கையில் சொல்லப்படுகிறது.
அப்படி அவர்கள் பேசிய இலஞ்ச பேரத்தில் முதல் கட்டமாக 2029 கோடி கை மாதிரி இருப்பதாக குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. அந்த இலஞ்சப் பணத்தில் 1800 கோடி பெரும் பங்கு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வெளிநாட்டு முக்கிய நபருக்கு சென்றிருப்பதாக குற்றப்பத்திரிக்கையில் தெரிய வருகிறது. இந்த இலஞ்சப் பணம் பல வகையில் கை மாறிய பிறகு தான் தமிழ்நாடு போன்ற மற்ற மாநிலங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட துவங்கி இருக்கின்றன.
இந்திய ஒன்றியம் முழுவதும் 12000 மெகா வாட் மின்சாரம் செய்ய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதெல்லாம் நடந்தது ஜூலை 2021 இல் இருந்து பிப்ரவரி 2022க்கு இடையில் இருந்த காலகட்டம் என குற்றப்பத்திரிக்கையில் தெளிவாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த காலகட்டத்தில் தான் தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியும், ஒன்றியத்தில் மோடியின் தலைமையிலான பாஜக ஆட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த இலஞ்ச ஊழலின் சாராம்சமே இந்த இரண்டு கட்சியின் தலைமையும் SECI என்ற நிறுவனத்தின் மூலமாக ரகசிய கள்ள உறவு மேற்கொண்டு அதானி நிறுவனத்திற்காக இலஞ்ச பணத்தை வாங்கி தங்களுக்குள் பகிர்ந்து தரகு வேலை பார்த்தது தான் என அனைத்தும் குற்ற பத்திரிக்கையின் அடிப்படையில் வெளிப்படையாக நிரூபணம் ஆகியுள்ளது.

முதற்கட்ட விசாரணையில் 2029 கோடி வாங்கியதாக தெரியவந்துள்ளது. அதானி மற்றும் இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் கைது செய்து விசாரிக்கப்பட்டால் இதன் மதிப்பு மேலும் உயரும் என இதன் மூலம் அறிய முடிகிறது.
சரி மீண்டும் அந்த குற்ற பத்திரிக்கைக்குள் வருவோம். சூரிய ஒளி மின் உற்பத்தியை தொடங்க தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்களில் கொள்முதல் செய்ய போடப்பட்ட ஒப்பந்தத்திற்காக இலஞ்சப்பணம் மொத்தத்தையும் அசூர் நிறுவனத்திற்கும் சேர்த்து அதானி நிறுவனமே கொடுத்து ஒப்பந்தத்தை பெற்று சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா SECI உடன் மாநில மின் பகிர்மான கழகங்களையும் தன் வசப்படுத்தியது.
SECI அமைப்பிடம் 12000 மெகாவாட் உற்பத்திக்கான கொள்முதல் கோரிக்கையை இரண்டு நிறுவனமும் வைத்தது. அதில் அதானி குழுமம் 8000 மெகாவாட் உற்பத்திக்கும், 4000 மெகாவாட் அசூர் நிறுவனத்திற்கும் என பிரித்துக் கொண்டது. இதற்குமுன் விலை அதிகம் என திருப்பி அனுப்பப்பட்ட இந்த ஒப்பந்தத்தை சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா SECI ஏற்றுக் கொண்டு, தற்போது மின் கொள்முதல் செய்ய மாநிலங்கள் தயாராக இருப்பதாகவும், மின்சாரத்தின் தேவை அதிகம் உள்ளதாகவும் அதனால் இந்த சோலார் எனர்ஜி உற்பத்தி செய்ய அதானியிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் அறிக்கையை வெளியிடுகிறது.
பின்னர் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனமும், அசூர் பவர் குளோபல் லிமிடெட் என்ற நிறுவனமும் தங்களது சோலார் மின் உற்பத்தியை தொடங்கலாம் என அனுமதியைப் பெறுகின்றன. அவர்களும் தங்கள் மின் உற்பத்தி பணியினை தொடங்குகின்றனர். இதற்கிடையில் அசூர் நிறுவனத்திற்கும் சேர்த்து இலஞ்சப் பணத்தை விநியோகம் செய்த அதானி நிறுவனத்திற்கு அசூர் பவர் நிறுவனம் 7 மில்லியன் அமெரிக்க டாலர் பணமாக அதானியிடம் கொடுக்கப்பட்டது. இதன் பின்னர் முதற்கட்டமாக ஆந்திர மாநிலத்திற்கு 2.3 GW மின்சாரம் உற்பத்தி செய்ய முதற்கட்ட ஒப்பந்தம் செய்யப்பட்டு தன் முதல் பணியை தொடங்கியது.
ஆனால் அதன் பின்னர் இந்திய ஒன்றிய அமைச்சர்கள், அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட இரகசிய சந்திப்பில் ஏதோ சிக்கல் ஏற்பட்டதால் அசூர் நிறுவனம் ஆந்திராவில் துவங்கிய 2.3 GW மின் உற்பத்தியை சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா SECI யிடமே குறைந்த விலைக்கு விற்று விடுகிறது. அதற்கான காரணம் கூறுகையில் அசூர் நிறுவனத்தால் இந்த உற்பத்தியை நடத்த முடியவில்லை என காரணம் தெரிவித்து தங்களிடம் ஒப்படைத்ததாக இருக்கட்டும் என தங்களுக்குள் முடிவு செய்யப் பட்டதாக கூறப்படுகிறது.
இப்படி தங்களுக்கு வழங்கப்பட்ட ஒரு ஒப்பந்தத்தை அசூர் நிறுவனம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றால் இதில் அமெரிக்க நாடும் , இந்திய நாடும் தலையிட வேண்டும். ஏனென்றால் அசூர் நிறுவனம் என்பது அமெரிக்க பங்குச் சந்தையில் வரிசைப்படுத்தப்பட்ட ஒரு நிறுவனமாகும். இந்த நிறுவனம் ஒரு ஒப்பந்தத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்றால் அதற்கான காரணத்தையும், விளக்கத்தையும் Securities and Exchange Commission (SEC)யிடம் கொடுக்க வேண்டும். இந்த நிறுவனம் இந்தியாவில் இயங்கும் SEBI அமைப்பை போன்றது. இவர்களும் அதற்கான விளக்கத்தை கொடுத்து இருக்கிறார்கள். இதன் பிறகு பிரச்சனைகளை சுமூகமாக தீர்ப்பதற்காகவும் இந்திய ஒன்றிய அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் போன்றோரின் உறவை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் மீதமுள்ள ஒப்பந்தங்களை அதானி குழுமமே பார்த்துக் கொள்வதாக அசூர் நிறுவனத்திடம் கூறியிருக்கிறது.
மேலும் இந்திய அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களை தன் கைக்குள் வைத்துக் கொண்டிருப்பதாகவும், அவர்களுக்கான இலஞ்ச பணத்தை எப்படி வழங்கலாம் என திட்டம் வைத்துள்ளதாகவும் அசூர் நிறுவனத்திடம் அதானி கூறியதாக மின்னஞ்சல் உரையாடலில் இருப்பது குற்றப்பத்திரிக்கை மூலம் தெரிய வருகிறது.
இவை ஒரு பக்கம் இருக்கையில் இந்த சோலார் மின் உற்பத்தியை செயல்படுத்துவதற்கு மிகப்பெரிய முதலீடு தேவைப்படும். அதற்கான பணத்தை எங்கிருந்து பெற்றார்கள் என பார்த்தால் அமெரிக்காவில் இருக்கக்கூடிய நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடம் முதலீடு செய்வதற்காக கடன் வாங்கியுள்ளனர். இதன் மதிப்பு 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என கூறப்படுகிறது. அதில் சில பாண்டு பத்திரங்களும் அடங்கும் என தெரிய வருகிறது.
மேற்கூறிய அனைத்தும் அந்த குற்ற பத்திரிக்கையில் தெள்ளத் தெளிவாக கூறப்பட்டிருக்கும் தகவல்கள் தான். அமெரிக்காவின் Securities and Exchange Commission ( SEC ) அமைப்பு அசூர் நிறுவனத்தின் பணபரிவர்த்தனையை ஆய்வு செய்யும் போது அவர்களுக்கு நிறைய சந்தேகங்களும், குழப்பங்களும் எழுவதை புரிந்து கொண்டனர். அதன் பேரில் அசூர் பவர் குளோபல் லிமிடெட் நிறுவனத்தை விசாரணை செய்கிறார்கள். நீங்கள் இந்தியாவுடன் செய்கிற பண பரிவர்த்தனை எதன் அடிப்படையில் நடக்கிறது என்றும் , இதற்கான நிதி பரிவர்த்தனை மற்றும் பணப்பரிவர்த்தனைக்கான கோப்புகளை சமர்பிக்க வேண்டும் என இரண்டு நிறுவனங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கிறது. ஆனால் அசூர் மற்றும் அதானி நிறுவனம் இந்த பரிவர்த்தனைகளை மறைத்து போலியான நிதி மற்றும் பண பரிவர்த்தனைகளை உருவாக்கி அதனை SEC யிடம் இது தான் எங்களது பரிவர்த்தனை கணக்குகள் என சமர்ப்பித்ததாக குற்றப்பத்திரிக்கையின் அடிப்படையில் தெரிய வருகிறது.
இந்திய ஒன்றியத்தில் உள்ள அதிகாரிகள், அரசியல் தலைவர்களுக்கு கொடுக்கப்பட்ட இலஞ்சப் பணத்திற்கும் அமெரிக்க விசாரணைக்கும் என்ன சம்பந்தம், இந்த இலஞ்சப்பணம் இந்தியாவில் கொடுக்கப்பட்டது தானே இதை ஏன் அமெரிக்கா விசாரிக்க வேண்டும் என்ற கேள்வி நம்மிடம் எழலாம். அதற்கான பதில் Securities and Exchange Commission of America (SEC) என்ன கூறுகிறார்கள் என்றால் இந்தியாவில் இலஞ்சம் கொடுத்து ஒரு அமெரிக்க நிறுவனம் இந்தியாவில் ஒப்பந்தத்தை எடுத்து இருக்கிறார்கள். இதில் இந்த இலஞ்சம் மற்றும் நிதி மோசடிகளை மறைத்து போலி ஆவணங்களை சமர்ப்பித்து அமெரிக்க நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை ஏமாற்றி பில்லியன் கணக்கில் பணத்தை ஏமாற்றி இருக்கிறார்கள். இது அமெரிக்க முதலீட்டாளர்களை ஏமாற்றும் செயல் எனவும் அமெரிக்காவின் மிகப்பெரும் பொருளாதார மோசடியாக கருதுவதாகவும், அமெரிக்க பங்குச்சந்தையின் தொடர்புடைய ஒரு நிறுவனம் இப்படி செய்தது அமெரிக்க பங்குச் சந்தைக்கான அவமானமாக கருதுவதாகவும் SEC அமைப்பு தெரிவிக்கிறது. இதனால்தான் இவர்கள் இந்தியாவிற்கு வழங்கிய இலஞ்ச ஊழல் வழக்கை தாங்கள் விசாரிப்பதாகவும், வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் இந்த விசாரணையில் ஈடுபடும் போது அதானி மற்றும் அசூர் பவர் நிறுவனத்திற்கு இடையே நடந்த தொலைபேசி உரையாடல் மற்றும் மின்னஞ்சல் உரையாடல் சோதனை செய்யும்போது அதில் யார் யாருக்கெல்லாம் எத்தனை ரூபாய் இலஞ்சம் கொடுக்கப்பட்டது என்ற முழு தகவலையும் முழுமையாக அழித்ததாக அசூர் பவர் நிறுவனத்தின் ஏஜெண்டுகள் மீதும் நிர்வாகிகள் மீதும் குற்றச்சாட்டை தெரிவிக்கின்றனர். இந்தக் குற்றச்சாட்டு அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் மீது வைக்கப்படக்கூடிய மூன்றாவது மிகப்பெரிய குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டுக்கு பிறகு இந்திய பங்குச் சந்தை மதிப்பில் அதானியினுடைய சந்தை மதிப்புகள் 20% குறைந்ததாக தகவல்கள் தெரிகிறது. 2.50 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி ஜூலை 2021 இல் இருந்து பிப்ரவரி 2022 வரையிலான காலகட்டத்திற்குள் தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அதனியினுடைய எந்த நிறுவனத்துடன் கையெழுத்து ஒப்பந்தம் செய்யவில்லை; நாங்கள் SECI நிறுவனத்துடன் தான் ஒப்பந்தம் செய்தோம் என நிருபர்கள் முன்னிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்திருந்தார். அது பாஜக மற்றும் அதானிக்கும் இடையே நேரடி தொடர்பு எங்களுக்கு இல்லை என மழுங்கடிக்கும் பதிலாக தான் பார்க்கப்படுகிறது.
அமெரிக்க SEC அமைப்பு தாக்கல் செய்த குற்ற பத்திரிக்கையில், தமிழ்நாடு உள்ளிட்ட மொத்தம் நான்கு மாநிலமும் இலஞ்சம் வாங்கியது என குற்றப்பத்திரிகை தாக்கலில் உறுதியாக தெரிகிறது. இருந்தும் இதை மூடி மறைக்க எந்தெந்த வகையில் முயற்சி செய்ய முடியுமோ அத்தனை முயற்சிகளையும் தமிழ்நாடு அரசும் அதன் அதிகாரிகளும் , அமைச்சர்களும் செய்கின்றனர். இதுவரையிலும் இந்த ஊழல் தொடர்பாக தங்களிடமிருந்து தன்னிலை விளக்கமோ, மறுப்போ முதல்வர் அவர்களிடம் இருந்து பெறப்படவில்லை. இதுவே இவர்கள் குற்றம் செய்திருப்பார்கள் என்ற சந்தேகத்தை உறுதி செய்வதாக அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகி வருகிறது.
ஸ்டாலின் அவர்களின் மருமகனான சபரீசனுக்கும், தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கும் நேரடி தொடர்பு இல்லை என்றாலும், இந்த ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள கௌதம் அதானிக்கும், சபரீசனுக்கும் தொடர்பு இருக்கிறது.
முதலில் தமிழ்நாட்டில் அதானியின் நிறுவனங்கள் பட்டியலைப் பார்ப்போம். அதானி பவர் தமிழ்நாடு லிமிடெட். ( தெர்மல் பவர் நிறுவனம் ) , அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் ( சோலார் பவர் ), காட்டுப்பள்ளி அதானி துறைமுகம், அதானி லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட், அதானி இன்ப்ராஸ்ட்ரக்சர் தமிழ்நாடு லிமிடெட், அதானி வில்மர் லிமிடெட், அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட், அதானி டோட்டல் கேஸ் என பல நிறுவனங்கள் அதானியின் நேரடி மற்றும் துணை நிறுவனங்களாக தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன.
அதானி தமிழ்நாட்டில் மட்டுமல்ல எந்த மாநிலத்தில் நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்றாலும் இலஞ்சம் கொடுத்துத் தான் தொடங்குகிறார் என அரசியல் விமர்சகர்களும், பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் வெளிப்படையாகவே தெரிவிக்கின்றனர். ஆரம்பத்தில் இருந்தே திமுக வின் பின்னிருந்து இயக்கும் ஒரு மாபெரும் சக்தி, ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திமுகவின் முக்கிய தலைவர்களுக்கு அவர்களின் பங்கை மிகச் சரியாக கொண்டு போய் சேர்த்து விடுகின்றன. இதன் மூளையாக இருப்பது சபரீசன் தான் என பல தரப்பு அரசியல் விமர்சகர்கள் அரசியல் வல்லுநர்களின் கருத்தாக அமைகிறது.
குறிப்பாக இந்த ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கும் அதானி கிரீன் எனர்ஜி என்ற நிறுவனத்தின் சோலார் மின் உற்பத்தியின் காலமானது 2021 ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திமுக அரசு அதிகாரத்தில் ஏறிய போது தான் நிகழ்கிறது. 2021, 2022 ஆம் காலகட்டத்தில் அதன் மின்சார துறையின் பொறுப்பு அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி அவர்கள். இவர்களின் ஒப்புதலோ, அனுமதியோ இல்லாமலும், கவனத்திற்கு வராமலும் இப்படி ஒரு ஒப்பந்தத்தை அதானி நிறுவனம் செய்திருக்கவே முடியாது. இவை அனைத்தும் ஒரு மீள் வட்டம் போல இவர்களுக்குள்ளேயே சுழன்று சுழன்று வியாபார பேரம் நடைபெற்றுள்ளது .
குறிப்பாக இதை உறுதிப்படுத்தும் வகையில் 8 ஜனவரி 2024 அன்று அதானி குழுமம் 42000 கோடி ரூபாய் தமிழ்நாட்டில் முதலீடு செய்யப் போவதாக அறிவித்தது. அதில் அதானி கிரீன் எனர்ஜி ( Adani Green 3 PSP project) முதலீடு செய்ய 25000 கோடியும் , அதானி கனக்ஸ் ( Adani connex – Hyper scale data center) அமைக்க 13200 கோடி ரூபாயும் , அம்புஜா சிமெண்ட்ஸ் ( Ambuja cement – 3 cement grinding units) அமைக்க 3500 கோடி முதலீடாகவும், அதானி டோட்டல் கேஸ் ( Adani Total Gas ) அமைக்க 1568 கோடி ரூபாயும் முதலீடு செய்யப் போவாதாக தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 இல் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சோலார் மற்றும் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் TRB ராஜா அவர்கள், அதானி துறைமுகத்தின் தலைமை அதிகாரி கரன் அதானி அவர்கள் ஆகியோருக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த வெளிப்படையான ஒப்பந்தம் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் தான் அதானியின் கிரீன் எனர்ஜி சோலார் திட்டத்தில் 25000 கோடி அதிகப்படியான முதலீட்டைச் செய்கிறது. இதுவே இத்திட்டத்தை கையில் எடுக்க வாய்ப்பாக அமைந்தது. இந்த வியாபார பேரத்திற்கும் மூளையாக ஒரு ரிங் மாஸ்டர் போல அரசுக்கும் அதானிக்கும் இடையே பாலமாக நின்று இந்த சோலார் கிரீன் எனர்ஜி ஊழலை வெளி உலகத்திற்கு தெரியாமல் இரகசியமாக கொண்டு சென்று வெற்றிகரமாக முடித்திருப்பவர் சபரீசன் என அரசியல் வட்டாரங்களில் பெரிதும் பேசப்படுகிறது. தற்போது அமெரிக்க நீதிமன்ற தலையிடால் இந்த இரகசிய பேரம் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதானியின் மீது நடவடிக்கை எடுக்க இந்திய ஒன்றிய அரசாங்கம் இதுவரை எந்த ஒரு முன்னெடுப்பும் செய்யவில்லை . வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் இது குறித்தான விவாதங்களை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம் தீட்டிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் எதிர்க்கட்சிகளே இந்த ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதனால் எப்படிப்பட்ட விவாதம் நாடாளுமன்றத்தில் எழும் என்பது மிகப்பெரும் குழப்பத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் கேள்விகளையும் எழச்செய்கிறது…
விரைவில் கைது செய்யப்படுவாரா அதானி? அல்லது அதானிக்கு பாதுகாப்பு கொடுக்க முன் நிற்பாரா மோடி? பல நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மோடி அவர்கள், அமெரிக்காவின் இந்த அழுத்தத்தை எதிர்கொள்வாரா? பாஜகவும் திமுகவும் எதிரெதிர்முனை என வலைதளங்களில் பரப்புரை செய்யும் உடன்பிறப்புகளும் , பாஜகவினரும் அதானி குறித்தான இந்த நிலைப்பாட்டில் விழி பிதுங்கி நிற்கிறார்கள்.
முதல்வர் ஸ்டாலின் அவர்களும் பதில் சொல்ல முடியாமல் கேள்விகளுக்கு அஞ்சி ஓட்டம் பிடிக்கிறார். ஊழல் வழக்கின் அடுத்தடுத்த நகர்வுகள் இன்னும் இந்த ஊழல்வாதிகளுக்கு மிகப்பெரும் நெருக்கடியை கொடுக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அடுத்தடுத்த வழக்கு நகர்வுகளை பற்றி தெரிந்துகொள்ள நாமும் ஆர்வமாய் இருக்கிறோம்.
திரு. வன.லெனின்,
ஊடகப் பாசறைப் பொறுப்பாளர்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.