மே 2025
மே-18 சுடும் நினைவுகள்
அன்பும் அறமும் போதித்த எம்மினம்
சிங்கள அரக்கர்களால் அலங்கோலமானதே…
உலகிற்கு உணவளித்த தாயினம் உண்ண
உணவின்றி உருக்குலைந்து உலாவியதே…
நாகரிகம் படைத்தளித்த நாகர் இனமே
நாற்புறமும் பகைசூழ நாதியற்று நாசமானதே…
மும்மாரி பொழிந்து செழித்த நிலம்
கொத்துக்குண்டு பொழிந்து பொசுங்கியதே…
மூச்சுக்காற்றை உறிஞ்சும் நச்சுக்குண்டால்
மூர்ச்சையடைந்து நம் மக்கள் செத்து விழுந்தனரே!
ஊரெல்லாம் உருக்குலைந்த உடல்கள் குவிந்திருக்க
தெருவெல்லாம் செங்குருதி ஆறாய் ஓடியதே…
துள்ளித் திரிந்த எம்மினத்தின் பசும்பிஞ்சுகள்
துள்ளத் துடிக்க வலிபொறாது மாண்டனவே…
ஆறரைக் கோடி உறவுகள் அருகிருந்தும்
அரவணைப்பின்றி எம்மக்கள் அழிந்தனரே…
கூட்டமாய் வாழ்ந்த மரபினன் சவக்குழிக்குள்ளும்
கூட்டமாய்த் துயில்கொள்ள நாமின்னும் வாழ்கிறோமே!
கதிரவன் வெந்தணல் உமிழும் மே மாதம்
சதியால் நம் தமிழினம் அழிந்த இருள்மாதம்
உழைப்பினைப் போற்றும் இம்மாதத்தில் எம்மின
அழிப்பினை அகிலத்தார் நினைவுற மறந்ததேனோ…….?!
திரு. மருதநிலவன் மா.வடிவேலன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.