மே 2025
தமிழீழம்: வரலாறும் விழிப்புணர்வும்
இலங்கையில் தமிழீழம் தொடர்பான வரலாறு சிங்கள இனவெறி, புறக்கணிப்பு மற்றும் தமிழர் விடுதலைக்கான போராட்டத்தின் கூட்டுக்கலவையாகும். 1948-ம் ஆண்டில் இலங்கை சுதந்திரம் பெற்ற பிறகு, தமிழ் மக்கள் மீது தொடர்ந்து அழுத்தம் மற்றும் புறக்கணிப்பு நடைமுறையில் இருந்து வந்தது. 1956-ல் “சிங்களம் மட்டுமே தேசிய மொழி” எனச் சட்டம் கொண்டு வந்ததால், தமிழ் மக்களின் அரசு வேலை மற்றும் கல்வி வாய்ப்புகள் பாதிக்கப்பட்டன. இதுதான் இனச் சச்சரவுகளுக்கு முக்கிய காரணமாயிற்று.
தமிழர் புறக்கணிப்பும் ஆயுதக் கிளர்ச்சியும்:
தமிழ் மக்கள் சமபங்கு, உரிமை ஆகியவற்றிற்காக நியாயமான முறையில் போராடிய போதும், அரசு மற்றும் சிங்கள ஆதிக்க அரசியல்வாதிகள் ஒத்துழைக்கவில்லை. 1970-களில் ஐக்கிய தேசியக் கட்சி (UNP), இலங்கை சுதந்திரக் கட்சி (SLFP) ஆகிய இரண்டும் தமிழ் மக்களின் பிரச்சனைகளைப் புறக்கணித்து, இராணுவம் மூலம் அடக்குமுறைகளை அதிகரித்தது. இதனாலேயே விடுதலைப் புலிகள் (LTTE) உள்ளிட்ட ஆயுதக் குழுக்கள் உருவாகின.

மேதகு வே பிரபாகரனும் தமிழர் விடுதலைக் கனவும்:
மாணவராக இருந்த வேலுப்பிள்ளை பிரபாகரன், தமிழ் மக்களின் நிலையை புரிந்து, தமிழர்க்கென ஒரு தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கையுடன் விடுதலைப் புலிகளை உருவாக்கினார். அவரின் தலைமையில் தமிழீழ விடுதலைக் கனவு வலுத்தது. ஆனால் அவரை “அதிகாரத்திற்கு ஆபத்தாக” கருதிய பல பன்னாட்டுச் சக்திகள் – குறிப்பாக அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், இந்திய ஒன்றியம் – அவரை நவீன இராணுவத் திட்டங்களால் அழிக்க எண்ணின.
இந்திய ஒன்றிய அரசின் தலையீடு:
1987-ல் இந்திய ஒன்றியம், இந்திய அமைதிப் படையை (IPKF) அனுப்பியது. ஆனால் அது அமைதியை நிலைநாட்டவில்லை; மாறாக, தமிழ் மக்கள் மீதான வன்முறைகள் அதிகரிக்க, இந்திய ஒன்றியம் மீது எதிர்ப்பு உருவாகியது. பல உலகச் சதிகாரர்களால் இராஜீவ் காந்தியின் மரணம் நிகழ்ந்துவிட, இந்த மரணத்திற்குக் காரணம் விடுதலைப்புலிகள் என்று கட்டமைக்கப்பட்டது. ஆனால் விடுதலைப் புலிகள் இதனை முற்றாக மறுத்தார்கள். அதன் பின்னர், இந்திய ஒன்றியம் முழுமையாக இலங்கையின் உள்நாட்டு அரசியலில் இருந்து விலகியது. ஆனால், 2000த்துக்குப் பின்னான ஆண்டுகளில் இந்திய ஒன்றியத்தின் அனுமதியுடனே இலங்கை அரசு புலிகளுடனான சிக்கல்களைத் தீர்ப்பதை விட, புலிகளை ஒழித்தே விட முடிவு செய்தது. இதன் பின்னாகவே மே 2008 – 2009 காலகட்டத்தில் கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் பேரைக் கொன்ற தமிழினப் படுகொலை நிகழ்ந்தது. ஆனால் 1948இல் இலங்கை விடுதலை அடைந்ததில் இருந்து, அந்நாட்டில் ஒடுக்கப்பட்டு வரும் தமிழர்களின் நிலையைக் கணக்கில் எடுத்தால், நவீன உலக வரலாற்றில் தமிழின அழிப்பு என்பது எழுபதாண்டுக்கும் மேலாக நீளும் மிகப்பெரிய இன அழிப்பு என்பதே உண்மை.
புவிசார் அரசியலும் பன்னாட்டுச் சதித்திட்டங்களும்:
திருக்கோணமலை துறைமுகம் உள்ளிட்ட வடகிழக்கு பகுதிகள், இயற்கை வளங்கள் நிரம்பியதாகவும், பன்னாட்டு கடல் வணிகப் பாதைகளுக்கேற்ற தந்திரோபாய முக்கியத்துவம் வாய்ந்த தளங்களாகவும் இருப்பதால், பன்னாட்டு ஆதிக்கச் சக்திகளுக்கு ஆர்வத்துகுரியதாக அவ்விடம் மாறியது. அமெரிக்கா, சீனா, இந்திய ஒன்றியம் ஆகிய நாடுகள், தங்கள் தலையீடுகளை அங்கு மேம்படுத்த முயன்றன. திருக்கோணமலை தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. நம் தேசியத் தலைவர் புவிசார் அரசியலை நன்கு அறிந்திருந்தவராதலால், ஆதிக்கச் சக்திகளின் தாக்கம் மற்றும் வளவேட்டைப் போட்டிகளுக்கு இடங்கொடுக்க விரும்பவில்லை. இந்த நிலையில் தான், தமிழர்களின் விடுதலைக்கான போராட்டம் புறக்கணிக்கப்பட்டது. இன்று வரை இனப்படுகொலைக்கான நீதியும் கிடைக்காமலிருக்கிறது.
விழிப்புணர்வும் எதிர்காலத் தீர்வும்:
இன்றைய காலக்கட்டத்தில், இலங்கையில் தமிழர்கள் விடுதலை உணர்வோடு வாழ்வதற்கான சூழல் இன்னும் உருவாகவில்லை. தமிழர்கள் அரசியல் அதிகாரம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வுரிமையில் பின்தள்ளப்பட்ட இரண்டாம்தரக் குடிமக்களாகவே நடத்தப்படுகின்றனர். அவர்களுக்கான தீர்வானது, கீழ்க்காணும் நடவடிக்கைகளில் இருக்கலாம்:
தமிழ்நாட்டு அரசு – உலகிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான், பெரும்பான்மைத் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு தமிழர்களுக்கென உள்ளது. வேறு எந்த நாட்டிலிருக்கும் அரசிலும் தமிழர்கள் சிறுபான்மையினரே. எனவே உலகில் எங்கு தமிழர்கள் வசித்தாலும், அவர்களுக்கு ஒரு சிக்கல் என்றால் அதைத் தீர்ப்பதற்கான முதல் ஆதரவுக் குரல் தமிழ்நாட்டு அரசிலிருந்து வர வேண்டும். இதனை மனதில் வைத்து தமிழ்நாடு அரசு ஈழத்தமிழர் சிக்கலுக்கு பிராந்திய வல்லரசுகளில் ஒன்றான இந்திய ஒன்றியம் அரசியல் தீர்வு கொண்டுவர இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் சூழலை உருவாக்க வேண்டும்.
இந்திய ஒன்றிய அரசு – தமிழ்நாட்டின் பலகோடித் தமிழர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, ஈழத்தமிழ் மக்களின் தன்னாட்சி மற்றும் வாழ்வாதார உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வளிக்க, இனியேனும் இலங்கை அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். குறைந்தபட்சம் சீன அச்சுறுத்தலினின்று தனது தென்னாட்டுப் பகுதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யவேனும் தமிழ் ஈழம் அமைய இந்திய ஒன்றிய அரசு முயல வேண்டும்.
இலங்கை அரசு – தொடர்ந்து தமிழர்களுடன் மோதல் போக்கைக் கையாண்டு, அவர்களுக்கு நியாயமான முறையில் உரிமைப்பகிர்வு அளிக்காததே, பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த போர்ச்சூழலுக்குக் காரணம் என இனியேனும் இலங்கை உணர்ந்து அரசியல் தீர்வு நோக்கிப் பயணிக்க வேண்டும். தனது மோசமான பொருளாதாரச் சீர்குலைவுக்கும், சீனச்சார்புக்கும் போர், இராணுவ ஊழல் மற்றும் தவறான நிலைப்பாடுகளே காரணம் என்று இலங்கை உணர வேண்டும்.
உலக நாடுகள் – நடந்தது இனப்படுகொலை தான் என்று ஒப்புக்கொண்டு, இனவெறி காரணமாக நிகழ்ந்த மனிதகுலத்துக்கெதிரான குற்றங்களை விசாரித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு இனத்தின் உரிமைக் கோரிக்கைக்கு ஏற்பட்ட ஒரு துயரப் பயணமாகும். ஆனால் அது இன்னும் முடிவடைந்துவிடவில்லை. எதிர்காலத்தில் தமிழர்களுக்குத் தன்னாட்சி உரிமைகளுடன் கூடிய ஒரு தாயகம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உயிருடன் இருப்பதே உண்மையான வெற்றி. ஒவ்வொரு தமிழனும் விழிப்புணர்வுடன் நாம் தமிழராய் இணைந்து அதற்கென உரிமைக்குரல் எழுப்ப வேண்டும்.
திரு. க.நாகநாதன்,
செந்தமிழர் பாசறை – ஓமன்.