spot_img

அனகாபுத்தூர் –  ஆக்கிரமிப்பு என்ற பெயரில் மக்களைத் துன்புறுத்தும் விடியா அரசு

சூன் 2025

அனகாபுத்தூர் –  ஆக்கிரமிப்பு என்ற பெயரில் மக்களைத் துன்புறுத்தும் விடியா அரசு

தமிழ்நாட்டில் நகர்ப்புறப் பகுதிகளை மேம்படுத்துகிறோம்; ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் எனும் நகர வளர்ச்சித் திட்டங்கள், பல பகுதிகளில் நரக வளர்ச்சி திட்டமாகிவிட மக்கள் பல ஆண்டுகள் வசித்த தங்களது வீடுகளை இழந்து வீதிகளில் கண்ணீரோடு நிற்கிறார்கள். சமீபத்தில் அனகாபுத்தூர், பழவேற்காடு, சோழிங்கநல்லூர் போன்ற இடங்களில் நடந்த ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைகள் அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள்.

ஆக்கிரமிப்பு என்ற பெயரில் நியாயமற்ற நடவடிக்கைகள்:

மக்கள் ஆறு, கால்வாய், ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளனர்; இது சட்டத்துக்கு விரோதமானது, ஆகவே இடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் சமூக நியாயக் கோணத்தில் பார்ப்பதாயின்:

  • இப்பகுதிகளில் மக்கள் 30-60 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். சிலருக்கு பட்டாவைக் கூட அரசு வழங்கியுள்ளது.
  • அனைவருக்கும் மின் இணைப்பு, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை வழங்கியுள்ளது.
  • சாலை, மழைநீர் வடிகால் வசதி செய்து வைத்துள்ளது.
  • பாலிடெக்னிக், அரசுப் பள்ளிகள், அரசு மருத்துவ மையங்கள் கூட கட்டப்பட்டுள்ளன

அப்படியென்றால் இப்பொழுது மட்டும் எப்படி இந்த இடங்கள் “ஆக்கிரமிப்பு” என அரசுக்குப் புரிந்தது? அனகாபுத்தூரில் அரசு நடத்திய இடிப்பு நடவடிக்கை நியாயமா? வேறு ஏதும் நிர்ப்பந்தமா? அரசின் நிர்வாகக் கட்டமைவிலுள்ள ஒருசில அதிகாரிகள், தொழில்முனைவோர், அரசு சுரண்டல் கூட்டணி மூலம் திட்டமிட்டு செய்யும் திட்டமா?

சட்டத்தின் அடிப்படையில் தங்களுக்கு ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு அரசைக் கேள்வி கேட்கும் உரிமை உண்டா? மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கின்ற ஒரு முதல்வர் புதிய சட்டத்தை உருவாக்கி மக்களை அந்த இடத்திலேயே இருக்க வைக்கலாம். ஆனால் இவர்கள் பெருமுதலாளிகளின் கையாளாக இருக்கிறார்கள்.

இந்திய ஒன்றிய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சில முக்கிய நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில்:

  • மாநில அரசு ஒரு இடத்துக்கு வரிவசூலிக்கத் தொடங்கினால், அங்கு வசிக்கும் மக்கள் நிலையான உரிமை பெறுவதற்கான வாய்ப்பு உருவாகிறது.
  • 12 ஆண்டுகள் தொடர் வசிப்புக்குப் பிறகு அந்த இடம் சொந்த உரிமையாக மாறலாம் என்பது சில நீதிமன்றங்கள் தீர்ப்பாகக் கூறியுள்ளன.
  • இந்திய ஒன்றியப் பாராளுமன்றம் மற்றும் பல மாநில சட்டங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு இடத்தில் வசிப்பவர்களுக்கு நில உரிமை வழங்கப்படலாம் (பொதுவாக Bhoodan Land Acts, Patta Regularisation Schemes போன்றவை). சில வணிக நோக்கங்களுக்காக அரசு திட்டமிட்டு மக்களை வதைக்கிறது என நினைக்கத் தோன்றுகிறது.

இடமாற்றம் என்ற பெயரில் திணிக்கப்படும் சமூகச்சீர்கேடு:

அனகாபுத்தூரில் மக்கள் குடும்பமாக 60 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். தற்போது அவர்களின் வீடுகளை இடித்து அவர்களை பல கி.மீ தூரத்தில் உள்ள பகுதிக்கு கட்டாயமாக இடமாற்றம் செய்கின்றனர்.

இதனால் ஏற்படும் பாதிப்புகள் மிக மோசமானவை.

  • அவர்களின் வேலை வாய்ப்பு சிதைகிறது.
  • குழந்தைகளின் கல்வி பாதிக்கிறது
  • சமூக உறவுகள் முறிந்து விடுகின்றன.

மக்கள் நல்வாழ்வை விரும்பும் அரசு எப்படி இருக்க வேண்டும்?

  • ஒரு நல்ல அரசு சட்டத்துக்குட்பட்டு  மக்களுக்கு வசிப்பிட உரிமை வழங்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
  • நீர்நிலைகளைப் பாதுகாக்க விரும்பினால், புதிய ஆக்கிரமிப்புகளைத் தடுப்பதிலேயே கவனம் செலுத்த வேண்டும்.
  • நீண்டகால வசிப்பை சட்டபூர்வமாக ஒழுங்குபடுத்த திட்டங்கள் உருவாக்க வேண்டும்.
  • இடமாற்றம் அவசியமானால், அதே பகுதியில் மாற்று இடம்/நிகர மதிப்பு வசதி செய்ய வேண்டும்.

எளிய மக்களை உள்ளடக்காத வளர்ச்சி உண்மையான வளர்ச்சி இல்லையென்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். தனி மனித உரிமைகள், சமூக நீதி, சட்டத்தின் பொருள் ஆகியவற்றை மதிக்காமல் தான்தோன்றித்தனமாக மக்களின் வீடுகளை இடிப்பதை வளர்ச்சி எனும் பெயரில் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாக மட்டுமே நம்மால் பார்க்க முடிகிறது.

திரு. க. நாகநாதன்,

செந்தமிழர் பாசறை – வளைகுடா.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles