சூன் 2025
உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா!
திக்கெட்டும் மானத் தமிழர் கூட்டமடா!
திராவிடம் நம்மை நாள்தோறும் ஆள்வதா!
தமிழை முன்னிறுத்தி நம்மவரென வேடம் தரித்தாரே!
நயவஞ்சகர் கூட்டம் நம்மை ஏய்த்ததை மறைத்தாரே!
இன்பத் தமிழை எதுகை மோனையுடன் உதடுகள் உச்சரிக்க!
உண்மையென நம்பி நிலமாளும் உரிமையதை இழந்தோமே!
நயவஞ்சகர் நாவினுள் கொடிய நஞ்சிருந்ததை மறந்தோமே!
கயவர் கூட்டம் கருநாகமென்பதை காலங்கடந்து உணர்ந்தோமே!
தமிழர் உரிமைக்கு தரணியில் எத்தனை போராட்டமடா!
தமிழர் நல்வாழ்வு தொலைதூரக் கானல் நீரோட்டமடா!
அடக்குமுறைக்கு அஞ்சாத அன்னைத் தமிழ் கூட்டமடா!
ஒடுக்குமுறையை தகர்த்தெரியும் தலைவனின் பிள்ளையடா!
வந்தவரெல்லாம் ஆள்வதற்கு வாக்கை செலுத்தினோம்!
சொந்தவரை ஆள வைப்பதற்கு ஏனோ மறந்து போனோம்!
படையைப் பெருக்கிப் புதியதோர் வரலாற்றைப் படைத்திடுவோம்!
பாவேந்தன் பாடலை முன்னிறுத்திப் பாரெங்கும் விரைந்திடுவோம்!
சோலைகளும் நம்முன்னே கொள்ளை போவது சரிதானோ!
சோழனின் வாரிசும் வேடிக்கைப் பார்ப்பது முறைதானோ!
அன்னப் பறவையாய் நன்மை தீமையைப் பகுப்பாய்ந்திடு!
மூவேந்தரின் சின்னமென விரைவில் எதிராளியைக் கணித்திடு!
வரிப்புலிகள் இங்கே வஞ்சம் தீர்க்க காத்திருக்கு!
வளமான எதிர்காலம் நமக்காகப் பூத்திருக்கு!
பழந்தமிழரின் தீரத்தோடு பாராண்டப் பெருங் கூட்டம்!
தமிழினத் தன்னெழுச்சியால் மீண்டும் தரணியை ஆளட்டும்!
திசையாவும் தீந்தமிழ் வளர்ந்திட விரைந்திடு தமிழா!
திராவிடம் தீதென்று உரைத்திட உடனே விழி தமிழா!
திரு. பா.வேல்கண்ணன்.
செந்தமிழர் பாசறை – அமீரகம்.