சூலை 2025
தமிழ்நாட்டில் உள்ள நீர் நிலைகளின் இன்றைய நிலை
தமிழ்நாட்டில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பெருநகரங்களில் உள்ள நீர்நிலைகளே மாசுபட்டிருந்தன. இருபது ஆண்டுகளுக்கு முன்பு பெரு சிறு நகரங்களில் உள்ள நீர்நிலைகளும் மாசுபட்டு இருந்ததை காண முடிந்தது. இன்றோ கிராமங்கள் தோறும் உள்ள சிறு நீர்நிலைகள் கூட மாசுபட்டு இருப்பதை காண முடிகிறது. மனித பயன்பாட்டிற்கு மட்டுமல்லாது கால்நடைகளின் பயன்பாட்டிற்கு கூட நீர் இல்லாத சூழல்தான் இப்போது ஊர் தோறும் நிலவி வருகிறது.
பண்பட்ட சமூகம் தனது நீர் ஆதாரங்களை பேணிக்காத்து வந்தனர் என்பதற்கு நமது முன்னோர்கள் நீர் நிலைகளை தூர்வாரி பராமரித்ததே சான்றாகும். நீர் ஆதாரங்களை பேணிக்காப்பது, அரசு மற்றும் தனிமனிதரின் கடமையாக இருந்து வந்தது. அவ்வாறே மரங்களையும் மலைகளையும் காட்டையும் கடலையும் இன்ன பிற உயிரினங்களையும் பாதுகாத்து வந்தனர்.
நீர்நிலை மாசுபாடு:
நுகர்வு கலாச்சாரம் எனும் மாய வலையினுள் சிக்குண்ட பின் இயற்கையில் இருந்து மனிதன் வெகு தொலைவிற்கு தள்ளப்பட்டுவிட்டான் என்பதே நிதர்சனம். உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், வணிகமயமாக்கல் இதற்கான அடித்தளத்தை உருவாக்கியது. இவ்வாறு நுகர்வு கலாச்சாரத்திற்குள் அமிழ்ந்து போன பிறகு அதன் மூலம் உருவாகும் கழிவுகளை மேலாண்மை செய்வதறியாது கழிவுகளை நீர்நிலைகளுக்குள் தள்ளும் அவல நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் ஊர்தோறும் உள்ள சிறு குளங்களும் குட்டைகளும் ஓடைகளும் ஆறுகளும் மதுபான போத்தல்களாலும் நெகிழி குப்பைகளாலும் போர்த்தப்பட்டுள்ளன. இதனால் அவை சாக்கடைகள் போன்று தோற்றமளித்து, மனிதர்களும் இன்ன பிற உயிரினங்களும் பயன்படுத்த முடியா நிலை ஏற்பட்டுள்ளது.
திராவிட அரசுகளின் பொறுப்பின்மை:
நீர்நிலைகளை மாசுபடுத்துகிறோம் என்ற உணர்வு ஏதுமற்ற உயிரினமாகவும் மாசுபட்ட நீர் நிலைகளை தூய்மை படுத்த வேண்டும் என்ற சிந்தனையற்ற உயிரினமாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய சமூக அமைப்புகளும் வாய்மூடி மௌனம் காத்து வருகின்றனர். கிராமங்களில் இருக்கும் நீர் நிலைகளுக்கு கிராம மக்களும் அதன் நிர்வாகிகளுமே பொறுப்பேற்க முடியும். அவ்வாறே நகரங்களில் உள்ள நீர் நிலைகளை பாதுகாப்பது அந்நிலத்தில் வாழும் மக்களின் கடமையாகவே உள்ளது. நீர்நிலைகள் மாசுபடுத்தப்படும் போது அதனை எதிர்த்து தட்டிக் கேட்பதோ அல்லது நடவடிக்கை எடுப்பதோ இல்லாமல் போய்விட்டது.
மனித மனம் குறுகி தானும் தன் வீடும் என்றாகி விட்டது. அப்படி ஆகிலும் வீடுகள் கூட சுத்தமாக வைக்கப்படுகிறதா என்றால் அதுவும் கேள்விக்குறியாகவே உள்ளது. எதை நோக்கி இச்சமூகம் சென்று கொண்டிருக்கிறது என்ற ஐயம் இயல்பாகவே எழுகிறது. சமூக அக்கறை குன்றிய மனிதர்களாக நாம் வாழும் போது அது அரசிற்கு சாதகமாகவே அமைந்து விடுகிறது. குப்பைகளை மேலாண்மை செய்யும் எந்த உறுதியான நடவடிக்கையும் அரசு மேற்கொள்ளாமல், மேம்போக்காக குப்பைகளை வாரி ஓரிடத்தில் குவித்து நிலமும் காற்றும் நீரும் மாசுபடுத்தப்படுகிறது. இதில் ஒரு படி மேல் போய் மாநகராட்சி நிர்வாகங்களை குப்பைகளைக் கொண்டு கடலிலும் நீர் நிலைகளிலும் கொட்டுவதை நாம் காண முடிகிறது.
தமிழ்நாட்டில் வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்காக முதலில் தமிழ்நாட்டு அரசு நீர்நிலைகளுக்கு வரும் நீரை தடுக்கும் சதியை செய்து வருகின்றனர். இதன் மூலம் விவசாயிகள் விவசாயம் செய்ய இயலாது நிலங்களை கைவிடும் நிலைமைக்கு இயல்பாகவே தள்ளப்படுகின்றனர். பின்பு அரசுகள் நிலங்களை எளிதாக மக்களிடமிருந்து கையகப்படுத்தி நாசகார திட்டங்களை அமைத்துக் கொள்கின்றன. நீர்நிலைகளை ஆக்கிரமித்து அரசுகளும் தனியார் பெரு நிறுவனங்களும் செய்யும் வணிகச் செயல்களும் இதனால் அதிகரித்து வருவதை காண முடிகிறது. ஆற்று மணலை திருடுவதற்காக நீர்நிலைகளுக்கு வரும் நீரை தடுத்து நிறுத்துவது, பின்பு அதில் ஒரு பகுதியை குப்பைக் கிடங்காக மாற்றுவது போன்றவற்றை அரசின் உதவிக்கொண்டே தனியார் நிறுவனங்கள் செய்து வருகின்றனர்.
வளர்ச்சி என்ற போர்வையில் நிலங்களை இழந்து வாழ்வாதாரத்திற்காக ஏதிலிகளாக மக்கள் இடம்பெயர வேண்டிய அவல நிலைக்குள்ளாகின்றனர். ஊரோடு ஒன்றி வாழும் போது அந்த நிலத்திற்கும் நீர் நிலைகளுக்கும் ஆபத்து ஏற்படும் வேளையில் மக்கள் ஒன்று திரண்டு போராடவோ குரல் எழுப்பவோ முடியும். ஆனால் ஓரிடத்தில் உள்ள மக்கள் நிலத்தை இழந்து சிதறடிக்கப்படும் போது அன்றாட வாழ்க்கையை நோக்கியே தங்களின் போக்கு இருக்குமே தவிர சமூக அக்கறையுடன் ஒன்று கூடுவது என்பது சாத்தியமற்றதாகவே அமைகிறது.
தமிழகத்தின் வட எல்லையில் உள்ள சென்னை பெருங்குளத்தூர் ஏரியில் குப்பைகளை கொட்டியும், ஆக்கிரமிப்பு செய்தும் அந்நீரை பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. தென் முனையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவளம் எனும் சிற்றூரில் அமைந்துள்ள சிறு குளத்தில் உள்ள நீரும் நெகிழி குப்பைகளால் சூழ்ந்து மாசுபட்ட நீராகவே உள்ளது. வட எல்லை முதல் தென் எல்லை வரை எங்குமே நீர் நிலைகள் பராமரிக்கப்படவில்லை என்பதற்கும், பெரு ஏரியும், சிறு குளங்களும் கூட பராமரிக்கப்படவில்லை என்பதற்கும் இது சான்றாக அமைகிறது.
மக்கள் விழிப்படையாவிடில் இங்கு எந்த ஒரு மாற்றமோ புரட்சியோ ஏற்பட சாத்தியமில்லை. மக்கள் ஒன்று திரண்டு அறுபது ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்ட திராவிட அரசின் அலட்சியப்போக்கை கண்டித்து குரல் எழுப்பி தங்கள் பகுதிகளில் உள்ள நீர் நிலைகளை பாதுகாத்தாலே அன்றி நீர்நிலைகளை காப்பாற்ற வேறு வழி ஏதுமில்லை.
நன்றி.
திருமதி. பவ்யா,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.