செப்டம்பர் 2025
விடுதலைப் போராட்ட வீரர் எம்டன் டி.என்.தீர்த்தகிரியார்
1880ல் நவம்பர் நான்காம் நாள், அன்னசாகரம் தர்மபுரியில் பிறந்தவர். விடுதலைக்கு முன்பே தியாகி என்ற பட்டத்துடன் அழைக்கப்பட்டுள்ளார்.
ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தின்(தர்மபுரி & சேலம்) மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவராகவும், தர்மபுரி தாலுக்கா காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், தமிழ்நாடு கைத்தறி சங்கத் துணைத் தலைவராகவும், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவராகவும் இவர் இருந்தார்.
சிறந்த சித்த வைத்தியரான இவர் 1947-ல் தர்மபுரியில் மாவட்ட சித்த வைத்திய சங்கம் நிறுவி அதன் தலைவராகவும் இருந்தவர். சென்னை மாநில சித்த வைத்திய சங்கத்தின் கமிட்டி உறுப்பினராகவும் விளங்கினார்.
உப்புச் சத்தியாகிரகம்,வெள்ளையனே வெளியேறு, எனப் பல்வேறு போராட்டங்களுக்காக எட்டு ஆண்டுகள் சிறை சென்றுள்ளார். சிறையில் விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணி சிவாவுடன் செக்கிழுத்துள்ளார். ஐயாவின் வீரத்தைக் கண்டு, திரு. சுப்பிரமணிய சிவா அவர்கள் இவரை எம்டன் என்று அழைத்துள்ளார்.
பொது வாழ்விற்காகத் தன்னையே அர்ப்பணித்த இவர், பெரும் செல்வந்தராக இருந்து நாட்டிற்காகத் தனது சொத்துக்களை எல்லாம் இழந்துள்ளார். தர்மபுரியில் தனது சொந்த நிலத்தை பேருந்து நிலையம் மற்றும் பூங்கா அமைப்பதற்கு கொடுத்துள்ளார். ஐயா காமராசர் முதல்வராகப் பதவியேற்கும் பொழுது, அந்த அவையில் சட்டமன்ற உறுப்பினராக இவர் இருந்தார்.
தியாகி தீர்த்தகிரியார் நூற்றாண்டு விழா தர்மபுரி நெசவாளர் காலனியில், சுப்ரமணிய சிவா அரங்கில் 05.10.1985 நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற தீர்த்தகிரியார் சிலை திறப்பு விழாவிற்கு கேரள ஆளுநர் பா. இராமச்சந்திரன் தலைமை தாங்கினார். தீர்த்தகிரியார் சிலையைத் திறந்து வைத்து அப்போதைய இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் இரா. வெங்கட்ராமன் ஆற்றிய உரையின் சுருக்கம்:
”தமிழகத்தின் பழம்பெரும் தியாகிகளில் தலைசிறந்தவராக விளங்கி, எப்பொழுதெல்லாம் விடுதலை இயக்கம் நடைபெற்றதோ அப்பொழுதெல்லாம் பலன் கருதாது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் தியாகி தீர்த்தகிரியார்.
”விடுதலைப் போராட்டங்களின் பொழுது பல்வேறு கட்டங்களில் 8 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டார்.
”தென்னகத்தை பொறுத்தவரையில், விடுதலை வேள்வியில் அர்ப்பணித்துக் கொண்ட ’பெருந்தலைவர்’ காமராசர், ’மூதறிஞர்’ இராஜாஜி, தீரர் சத்தியமூர்த்தி போன்ற தலைவர்களெல்லாம் எவ்வளவோ தியாகங்களைப் புரிந்திருந்தாலும் கூட, சுதந்திரத்திற்கு முன்னரே ’தியாகி’ என்ற பட்டத்தைப் பெற்றவர் தீர்த்தகிரியார்.”
”சுதந்திரத்திற்குப் பின்னர் கைத்தறி நெசவாளர்களின் முன்னேற்றத்தில் அகில இந்திய அளவில் முக்கிய பங்கு வகித்தார்.
ஒரு முறை பெருந்தலைவர் காமராசர் முதலமைச்சராக இருந்தபோது தருமபுரி சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக நிற்கச் சொல்லி வற்புறுத்தியபோது தனக்கு எப்பதவியும் தேவையில்லையென வெறுத்துரைத்த மகத்தான தியாகிதான் தீர்த்தகிரியார்.”
விடுதலைப் போராட்டவீரர் எம்டன் டி.என்.தீர்த்தகிரியார் அவருடைய ஈகத்தை நினைவில் நிறுத்துவோம்; நாட்டுக்காக வாழ்ந்த நம் தலைவர்களின் புகழ் போற்றுவோம்!
திரு. பா. வேல்கண்ணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.