செப்டம்பர் 2025
தேசத்தின் புனிதன் தூய்மைப் பணியாளர்
திருக்கரம் கொண்டு தெருவோரம்
தூய்மை செய்திடுவார்!
வலக்கரம் என்றபோதும் தூய்மை
செய்திடத் துணிந்திடுவார்!
வருவோரும் போவரும் இவர்முகம்
கண்டு சுழித்திடுவார்!
அவரோ கடமை தவறாது
தம்பணியைச் செய்திடுவார்!
துப்பரவுப்பணி செய்து தூய்மை
தேசம் காத்திடுவார்!
நாடும் நலம்பெற நாளும்
தவறாமல் உழைத்திடுவார்!
மேல்வீட்டு மாந்தருக்கு குப்பை
அகற்ற நேரமில்லை!
இவர்கள் வானில் இருந்து
குதித்த புனிதருமில்லை!
சாதிப் பெயரைச் சொல்லி
இகழ்ந்திடும் பதறுகள்!
சாக்கடை அடைப்பிற்கு நாடுவார்
தூய்மைப் பணியாளரை!
மானிடப் புனிதம் பேசும்
மாந்தர் கூட்டம்!
மறந்தும் எமைக் காக்க
வாராது சட்டதிட்டம்!
தேங்கிக் கிடக்கும் குப்பைக்குள்
வாழ்க்கையும் நகருதே!
தேகம்கழுவி வந்தாலும்தேசம்
எம்மை ஒதுக்குதே!
எம்கடமை எந்நாளும் எள்ளளவும்
நாங்கள் மறப்பதில்லை!
எப்படிப்பட்ட துன்பங்கள் உற்றாலும்
எம்பணியை வெறுப்பதில்லை!
கால்வாயில் வழிந்தோடும்
கழிவுநீரை யாம் அகற்றிடுவோம்!
கவலையில் வழிந்தோடும் எமது
விழிநீரை யார் துடைப்பார்?
திரு. பா.வேல்கண்ணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.