தமிழ்ப்பண்பாட்டுத் தளத்தில் தொ.பரமசிவன் எனும் பெயர் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் சாதாரணமானதன்று; மிக ஆழமானதும், அவசியமானதுமான பல கருத்தாடல்களை உருவாக்கிவிட்டு, அதன் தொடர்விளைவுகளை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லும்விதமாக கட்டமைத்துவிட்டுச் சென்றிருக்கிறார் அவர் என்பதே சத்தியம். மேலோட்டமாகப் பார்க்கையில் மிக எளிதானதும் அற்பமானதுமாகத் தெரியும் சில கேள்விகள் மூலம், தத்துவ அணுகுண்டுகள் பலவற்றின் திரியைக் கிள்ளிப் பொறியைப் பற்றவைத்துவிட்டுப் போன பெருமைக்குரிய அறிஞர் தான் தொ.ப.
சாதாரண மனிதர்களின் நாளொன்றில் நடக்கும் சடங்கின் ஒரு சிறு பகுதியை எடுத்து அதனைச் சங்க இலக்கியம், வரலாறு, வழிபாடு, உளவியல், அறிவியல், புவியியல், வாழ்வியல், மெய்யியல், உலக அரசியல் என பல்துறைகளோடு இணைத்து, குறுக்குவெட்டாக அரிந்து ஆராயும் போக்குடன் கலையிலக்கியப் பொருளாதாரப் பண்பாட்டு அரசியல் தள சோதனைகளின் களமாக அதனை மாற்றும் வித்தையை அவரளவுக்குச் செய்தவர் எவருமில்லை என அடித்துச் சொல்லலாம். மெத்தப்படித்த மேதாவிகளின் தான்மைக்குத் தீனியிடும் துறையாக இருந்த மெய்யியல் தளம் எனும் எனும் கண்ணாடி மாளிகையை அடித்தட்டு மனிதர்களின் வாழ்வெனும் கோடரி கொண்டு உடைத்து நொறுக்கித் தரைமட்டமாக்கியவர் அந்தப் பேராசிரியர். எல்லாவற்றையும் எளிய மனிதர்களின் எண்ணவோட்டத்தில் அணுகியதால் ஆய்வு மாணவர்கள் மட்டுமின்றி அன்றாடங்காய்ச்சி மக்களுக்கும் மனதால் நெருக்கமானவர் தொ.ப என்றால் அது மிகையான கூற்றாக இருக்காது.
தமிழக அரசு நாட்டுடைமையாக்கிய அவரது அறியப்படாத தமிழகம், பண்பாட்டு அசைவுகள், அழகர் கோயில், தெய்வம் என்பதோர், வழித்தடங்கள், பரண், சமயம், சமயங்களின் அரசியல், தொ.பரமசிவன் நேர்காணல்கள், விடுபூக்கள், உரைகல், இந்துதேசியம், நாள்மலர்கள், மானுடவாசிப்பு, பாளையங்கோட்டை: ஒரு மூதூரின் வரலாறு, மஞ்சள் மகிமை, மரபும் புதுமையும், இதுவே சனநாயகம், செவ்வி, தமிழாராய்ச்சியின் வளர்ச்சி போன்ற பல நூல்களில், எனது பார்வையில் மிகவும் முக்கியமானதாகப் பட்ட நூல் தான், “தெய்வம் என்பதோர்”. தாய்த்தெய்வம், பழையனூர் நீலி, உலகம்மன், வள்ளி, சித்திரகுப்தன், சமணக்கோயில், ஆழ்வார் பாடல்கள் உள்ளிட்ட பல தலைப்புகளின் வரிசையில் கடைசி கட்டுரையான “வரலாற்று நோக்கில் முருக வழிபாடு” எனும் கட்டுரை தமிழ்த்தேசியர்கள் படிக்க வேண்டிய மிக முக்கியமான தகவல் தொகுப்பு.
நம்பிக்கை தான் வாழும் நாளெல்லாம் வாழ்வை நோக்கி மனிதர்களைச் செலுத்தும் மாய ஆற்றல். பற்றுக்கோடாய் ஒன்றைப் பிடித்துக் கொண்டால் மட்டுமே கரைபுரளும் காலவெள்ளத்தில் அலைபாயாமல் பயணிக்க முடியும் என்பதால், மனித இனம் தெய்வங்களை கொழுகொம்பாய் வரித்துக் கொண்டிருக்கிறது. அப்படியாக தமிழ் நாட்டாரியல் வழக்கில் ஊர்க்கடவுளர்களின் முக்கியத்துவத்தை, சகமனிதர்கள் சாமிகளான பரிணாமத்தின் பல பரிமாணங்களை, அவை சாமானியர்களின் சுகதுக்கங்களில் ஒரு பகுதியாக இருக்கும் பண்பாட்டு வரலாற்றை அலங்காரமில்லாத நடையில், ஆனால் ஆணித்தரமான சான்றுகளோடு நிறுவும் இந்நூல் அனைவரும் படித்தறிய வேண்டிய அட்டகாசமான ஆவணம்.
திருமதி. விமலினி செந்தில்குமார்,
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – வளைகுடா.