தமிழ் எழுத்துலகில் சூழலியல் சார்ந்து காத்திரமான படைப்புகளை நல்கிவரும் பசுமை இலக்கிய ஆளுமை தான் திரு. நக்கீரன் அவர்கள். நெடிய காவிரிச் சமவெளியின் தஞ்சை பகுதியில் பிறந்திருந்தாலும் தொழில்நிமித்தமாக வெட்டுமர நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய போது, காடுகளின் மீது அதீத காதலுற்ற எழுத்தாளர், வெட்டப்படும் மரங்களின் மௌன ஓலத்தின் சோக கீதங்கள் ஏற்படுத்திய தாக்கத்தால், சூழலியல் தொடர்பாக எழுதத் தொடங்கியுள்ளார். காடோடி, நீர் எழுத்து, அலையாத்திக் காடு, கண்ணுக்குத் தெரியாமல் களவு போகும் நீர், எறும்புகள் – ஆறுகால் மனிதர்கள், கார்ப்பரேட் கோடரி போன்ற நூல்கள் புவிவெப்படைதல் பின்புலத்திலத்தினூடே, சென்ற தலைமுறையைக் காட்டிலும் அதிகமான பேரழிவுகளை எதிர்கொள்ளும் சமகாலத்தவர்க்கு இயற்கையின் இயங்கியல் குறித்த புரிதல்களை உறுதியாக ஏற்படுத்தும்.
மழைக்காடு என்பதன் வரையறையில் தொடங்கி, உயர் அடுக்கு, கவிகை அடுக்கு, தாழ் அடுக்கு, தரை அடுக்குகளில் வாழும் கானுயிர் குறித்த அரிய தரவுகள், காடழிப்பின் பின்னணியில் இருக்கும் உள்ளூர் முதல் உலக அரசியல் வரையிலான தகவல்கள், “புவியின் நுரையீரல்” எனப்படும் அமேசான் மழைக்காடுகள் அழிக்கப்பட்டு சோயா மற்றும் இறைச்சிக்காக பண்ணைகளாக மாற்றப்படுவது, கனிம வள வேட்டைக்காக சுரங்கங்களாக ஆக்கப்படுவது வரையிலான விடயங்களை, உயிர்மூச்சு விற்பனைக்கு, மழைக்காடுகளின் மரணம், எரியும் அமேசான் மற்றும் மனிதகுலத்துக்கு மழைக்காடு எழுதும் மடல் ஆகிய நான்கு கட்டுரைகள் மூலம் அழுத்தம் திருத்தமாக சொல்லி, சூழலியல் சிக்கல்கள் குறித்த பல வினாக்களையும் எழுத்தாளர் முன்வைக்கிறார்.
வளர்ச்சி எனும் பெயரால் ஆசியாவின் போர்னியோ காடுகள் எழுபதுகளில் தொடங்கி இன்று வரை தொடர்ந்து சூறையாடப்படுதல், தென்னமெரிக்காவின் அமேசான் காடுகளில் ஐயத்துக்கிடமளிக்கும் விதமாக அதிகரித்துள்ள காட்டுத்தீ மற்றும் பால்சோனோரோயிசம் எனப்படும் புதிய சூழலியல் சுரண்டல் தத்துவம் போன்ற கவலையளிக்கும் உண்மைகளும் இதில் விளக்கப்பட்டுள்ளன. “பெருநிறுவனங்கள் பசுமைக்காடுகளை பணத்தாள்களாக மாற்றுகின்றன; ஆனால் அந்தப் பணத்தாள்களால் ஒருபோதும் பச்சையம் உருவாக்க முடியாது!” என்பதே முப்பத்தியிரண்டு பக்க இந்நூலின் இரத்தினச் சுருக்கமான உள்ளடக்கம்.
திருமதி. விமலினி செந்தில்குமார்,
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – வளைகுடா