பிற்காலச்சோழர்கள் மட்டுமல்லாது, தமிழ் மன்னர் அனைவரிலும் சிறந்த மன்னர் அரசர்க்கரசன் அருண்மொழிச்சோழன் என்று நாம் உறுதியாகச் சொல்ல இயலும். அண்மையில் அவரைப்பற்றிய விவாதங்கள் எழுந்ததும், அவற்றுக்கு பல்வேறு வரலாற்றாசிரியர்கள் எதிர்வினையாற்றியதும் நாம் அறிந்ததே! இந்தப் பின்னணியில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பதிப்பகமான “பன்மை வெளி” மூலம் பேராசான் பெ. மணியரசன் ஐயா அவர்களது ஆக்கத்தில் வெளியாகியிருக்கும் நூல் தான், தமிழ்ப்பேரரசன் இராசராசன்.
தமிழக வரலாற்றில் இராசராசன் ஓர் அரசனாகவும் தமிழனாகவும் இன்றுவரை ஏற்படுத்தியுள்ள தாக்கங்களை விளக்குவதோடு, அவரைச் சுற்றி வலிந்து கட்டமைக்கப்படும் போலிப் பிம்பங்களையும் இந்நூல் சான்றுகளோடு சுக்குநூறாக உடைத்திருக்கிறது. குறிப்பாக “வருணாசிரம ஆட்சி நடத்தியவர் இராசராசன்” எனும் மோசமான அவதூறை மறுத்து, களப்பிரர் காலத்தில் நுழைந்து, பல்லவர் காலத்தில் வளர்ந்த பிராமண ஆதிக்கம், இராசராசன் காலத்தில் தான் தொலைநோக்கோடு திட்டமிட்டு கட்டுப்படுத்தப்பட்டு மட்டுப்படுத்தப்பட்டது என்ற உண்மையைக் கல்வெட்டு ஆதாரங்களோடு ஊரறிய உரைத்திருக்கிறார் நம் ஆசான்.
சாதீயக் கட்டமைவைத் தாண்டி, தமிழரைக் கலை, பண்பாட்டு, மெய்யியல் மற்றும் வழிபாட்டுத் தளத்தில் ஒன்றிணைக்க அரச நிர்வாக இயந்திரத்தை முழுவேகத்தில் இயக்கியது இராசராசன் தான் என்பதையும், பெருங்கற்கோவில் கட்டிடக்கலையின் உச்சமாகப் பெருவுடையார் கோயிலை நிர்மாணித்து, கோவில்களின் மூலம் குடிமக்களது சமூகப் பொருளாதார மேம்பாட்டினை மேற்கொள்ளும் முறைமையினையும் அறிமுகம் செய்தது இராசராசனே என்கிறார், ஆசான் பெ.மணியரசன் அவர்கள்.
தமிழ்த்திருமுறைகளைத் தொகுத்து தேவாரத்தை மீட்டு, ஓதுவார்களை அமர்த்தி வழிபாட்டில் தமிழை முன்னிறுத்தியது, அக்காலத்தில் சமஸ்கிருத மற்றும் ஆரியப் பிராமண ஆதிக்கத்துக்கு விழுந்த பேரிடி. தேவரடியார் – தேவதாசி முறைகளுக்கிடையேயான வேறுபாட்டினை தக்க முறையில் எடுத்துக்காட்டுகளோடு சுட்டி, இராசராசன் மீது வீசப்பட்ட சேற்றைத் துடைத்திருக்கிறார் ஐயா. மேலும் இவ்வாறான புரட்சிகர மாற்றங்களை மன்னராட்சிக் காலத்திலேயே நடத்திக் காட்டிய நம் இராசராசனைக் கண்டு மனம் பொருமியவாறு காழ்ப்போடு கூடிய வன்மத்தோடு இழித்துரைப்பது மட்டுமின்றி, தமிழகத்தின் மோசமான அரசியல் மாற்றங்களுக்குக் காரணமான விசயநகர நாயக்கர் ஆட்சிக்காலத்தைப் பற்றிப் பேசுவதையே தவிர்த்துக் கள்ளமௌனம் சாதிக்கும் பெரியாரிய மற்றும் மார்க்கசீயர்களது சூழ்ச்சியினையும் தோலுரித்திருக்கிறார், நமது தமிழ்த்தேசியப் பேராசான்.
“தஞ்சை பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு” எனும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், தமிழர் கலைச்சிறப்பின் பேரடையாளமாம் இக்கோவிலின் அறங்காவலராக இருக்கும் மராட்டிய போன்ஸ்லேவை நீக்கவும், ஆழ்குழாய் கிணறு தோண்டி கட்டுமானத்தினைச் சிதிலமடையச் செய்வதையும், பிரகதீஸ்வரர் ஆலயம் என்று பெயர்ப்பலகை வைத்துச் செய்யப்படும் சமஸ்கிருதத் திணிப்பையும் எதிர்த்துப் பல போராட்டங்களை முன்னின்று நடத்தியதோடு, இங்கு தமிழில் திருக்குடமுழுக்கு செய்யவும் முக்கியமான காரணமாக இருந்த ஐயா மணியரசன் தஞ்சை மண்ணின் மைந்தராகவும், தகைமைசால் தமிழராகவும் அரசர்க்கரசன் அருண்மொழியைப் பற்றி எழுதியுள்ள தரவுத் தொகுப்பான இந்நூலை ஆழ்ந்து வாசிக்கும்போது, தமிழராய்ப் பிறந்ததற்கு உறுதியாக நாம் இறும்பூது எய்துவோம்.
திருமதி. விமலினி செந்தில்குமார்,
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – வளைகுடா.