செப்டம்பர் 2022
ஆசையும்! அழிவும்!
ஒருநாள் கொக்குகள் கூட்டமொன்று வானில் பறந்து அது நண்பகல் நேரம் என்பதால் வெயிலின் தாக்கம் சற்றுக் கூடுதலாக இருந்தது. வெகுதொலைவில் இருந்து வருகின்றோம். நமக்கு இப்போது ஓய்வும், தண்ணீரும் தேவை. வரும் வழியில் ஒரு குளம் கண்டேன். அங்கு சென்று உணவு உண்டுவிட்டு தண்ணீரும் குடித்துவிட்டு இத்தோடு நமது பயணத்தை நிறுத்திக்கொண்டு நாளை நம் பயணத்தை தொடராலம்” என்றது தலைமை கொக்கு. இந்த அறிவுரையில் இளவயது கொக்குகளுக்கோ ஏற்பில்லை.
தலைமை கொக்கின் பேச்சை கேட்காமல் பறக்கத் தொடங்கியது. தலைமை கொக்கோ “நாம் செல்ல வேண்டிய பயணத் தொலைவு சற்று தொலைவு தான். ஆனால் நாம் சற்று ஓய்வெடுத்து சென்றால் நாளை இன்னும் வேகமாக பறக்கலாம். இலக்கை வேகமாக அடையலாம்” என்றது.
மற்ற இளம் கொக்குகளில் நடுவில் இருந்த ஒரு பேராசைக் கொக்கு, “போன முறை நாங்கள் வரும்போது ஒரு பெரிய ஏரியைப் பார்த்தோம் அதில் என்றைக்கும் தண்ணீரும், மீன்களும் நிறைந்திருக்கும் நாங்கள் அங்கு போய் ஒய்வெடுத்து கொள்கின்றோம். நீங்கள் இந்த குளத்தில் தண்ணீரையே குடிங்கள். நாங்கள் ஏரியை நோக்கிப் பறக்கின்றோம்” என்று கூறிவிட்டு தலைவனின் பேச்சைக் கேட்காமல் தன்னுடன் மற்ற சில கொக்குகளையும் அழைத்துக் கொண்டு பறந்தது.
தலைமை கொக்குடன் இருந்த கொக்குகள், குளத்தில் இருந்த குறைவான நீரை அருந்திவிட்டு அன்று இரவு அங்குள்ள மரத்தில் அமர்ந்து தங்கின.
விடியல் பொழுதில் கொக்குகளுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. கடந்த முறை வந்த பாதையைத் தவறவிட்டு குறுக்குவழியில் வந்து அவை உணவும் நீருமற்ற வறண்ட நிலத்தில் சிக்குண்டன. வெப்பம் தாளாத பேராசைக் கொக்குடன் வந்த மற்ற கொக்குகள் அனைத்தும் ஓர் நீர்க்குடுவையைக் கண்டதும் தரையை நோக்கி விரைந்து பறந்தன.
அந்த நீர்க்குடுவை அருகில் வந்து அமர்ந்ததும் வேடன் ஒருவன் வைத்திருந்தக் கண்ணியில் அனைத்து கொக்குகளும் மாட்டிக் கொண்டன. தலைமையேற்று வந்த தலைமை கொக்கு, தான் தவறான வழியில் மற்ற கொக்குகளையும் பேராசைக் கொண்டு வரவைத்து கொல்லப்போகிறோம் என்பதை உணர்ந்தது.
மறுநாள் காலை குளத்தில் தண்ணீர் எடுக்க வந்த வேடர் வீட்டுப் பெண்கள், நேற்றைய இரவு தங்களது வீட்டில் கொக்குக்கறி விருந்து உண்டதை பெருமையாக பேசிக் கொண்டே நகர்ந்தனர். அப்போது மரத்தில் இருந்த இளம் வயது கொக்குகள் தங்கள் தலைவனைப் பார்த்து பெருமூச்சு விட்டன.
நாங்களும் பேராசை கொக்குடன் சென்று இருந்தால் வேடனின் கண்ணியில் சிக்குண்டு இருப்போம்” எனத் தலைவரிடம் கொக்குகள் கூறியபோது தலைவன் கொக்கு சிறியதாய் ஓர் புன்னகை செய்துவிட்டு தமது இலக்கை நோக்கி இளம் பறவைகளுடன் தனது பயனாத்தைத் தொடர்ந்தது. தலைவன் கொக்கு உறுதியாக இலக்கை வென்றிட உறுதுணையாய் இளம் பறவைகளும் உறுதியுடன் பறந்து சென்றன.
இக்கதையின் பாடம் யாதெனில்,
“மூத்தோர் பேச்சை கேட்காமல் நடப்பதும் பேராசையும், வாழ்க்கையில் பெரும் இழப்பை உண்டாக்கும்”.
திரு. பா. வேல் கண்ணன்,
துணைத் தலைவர்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.